S
Since 1983
Guest

தனியுடமையாக இருந்த நெருப்பை பொதுவுடமையாக மாற்றிய கார்த்திகை தீபம்.
வீடுகள் தோறும் விளக்கேற்றுங்கள்.
புத்தமதம் பரவியிருந்த காலத்தில் மடாலபுரம் எனும் ஊரில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பேராமணக்கு, சித்தாமணக்கு எனும் வித்துகளிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்தனர்.மேலும் தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையும் கண்டனர்.
இதன் விபரத்தை மன்னனிடம் சொல்ல, அவ்வரசன் ஆமணக்கை அதிகமாக விளைவிக்கச்செய்து, அங்கிருந்த மலையுச்சியில் வெட்டி பள்ளமிட்டு, ஆமணக்கு நெய்யை ஊற்றி, பருத்தி நூல் திரிசெய்து பெரும் தீபம் ஏற்றி விடியும் வரை எரியவிட்டான்.
காலையில் சென்று அந்தத் தீபப்புகையால் மிருகங்களுக்கும், ஆடு,மாடுகளுக்கும் ஏதேனும் தீங்கு நேரிட்டுள்ளதா என்று ஆராய்ந்தான். யாருக்கும் ஒரு கெடுதலும் ஏற்படாமல் இருந்ததால் மக்களை வரவைத்து ஆமணக்கு நெய்யைக் கொடுத்து தீபம் ஏற்றிக்கொள்ள உத்தரவிட்டான்.
ஆனால் மக்கள் இதை வீடுகளுக்குள் கொண்டு செல்லப் பயந்து, மூன்று நாள் வரையிலும் திண்ணைகளிலும், மாடங்களிலும் ஏற்றினர்.இதனால் ஒரு தீங்கும் இல்லையென அறிந்த பிறகு வீட்டிற்குள் ஏற்றிவைத்தனர்.வீடுகளில் வெளியே மாடக்குழி இன்றும் உண்டு.
அந்தத் தீபம் இருளை விளக்கும் ஒளியாக விளங்கிய படியால் (கார்த்துலதீப) எனும் பெயரை அளித்து, புத்தமார்க்கத்தினர் கண்டுபிடித்த கார்த்திகை மாத பவுர்ணமியில் தேசம் எங்கும் தீபம் ஏற்றி, தியானம் செய்தும், ஈகையில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.
புதமதத்தார் செய்த இந்த நற்செயல்களை, வேஷ பிராமணர்கள் வந்தபொழுது,மக்களிடம் பொய் புராணங்களை சொல்லி ஏமாற்றி, பொய் மதங்களைப் பரப்பினார்கள். புதமதத்தார் கண்டுபிடிக்காத தானியங்களை விட வேறு தானியங்கள் கிடையாது.
மேற்கண்ட வரிகள் அனைத்தும்
அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் எனும் நூலை அடிப்படையாக கொண்டது. அவர் இதை எதிலிருந்து சொல்கிறார்?
சித்தர்களில் மிக முக்கியமான சித்தராக கருதப்பட்டவர் தேரையர். காசிவர்மன் என்ற அரசன் ஒருவனின் காதுக்குள் நுழைந்து உச்சந்தலைக்குள் கடுமையான தலைவலியை உள்ளாக்கிய தேரை ஒன்றைத் தனது சமயோசிதச் செயலால் வெளியேற்றியதால் தேரையர் என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
தேரையர் பல அரிய மருந்து நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் பதார்த்த சிந்தாமணி. அதை ஆதாரமாக காட்டியே அயோத்திதாசப் பண்டிதர் விளக்குகிறார். தேரையர் மேற்குத் தொடர்ச்சிமலையில் தென்காசி பகுதியில் உள்ள தோரணமலையில் சமாதியடைந்ததாக கருதப்படுகிறது.
இதில் சொல்லப்படும் மடாலபுரம் தான் இப்போது திருவண்ணாமலை அருகிலுள்ள மடப்புரம் என்ற ஊர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ள மலையில் ஆமணக்கு விதையை எரித்து சோதனை செய்ததால் அண்ணாந்து மலை என்று அழைக்கப்பட்டு அண்ணாமலை என்றானது. நம்மில் மூத்தவரை, உயர்ந்தவரை அண்ணன் என்று அழைப்பதன் தொடர்ச்சி தான் அண்ணாந்து மலை.
மன்னர் காலங்களில் நெருப்பை பாதுகாத்து வைத்திருக்க தனிக்கிராமங்கள் இருந்தது வரலாறு. பல வீடுகளில் அடுப்பெரிக்க பக்கத்து வீட்டில் கங்கு வாங்கி வருவது சில காலம் முன்பு வரை கிராமங்களில் இருந்த நடைமுறைகளில் ஒன்று. 1800 களுக்குப் பிறகு ஜான் வாட்டர் என்பவரால் தீக்குச்சி கண்டறியப்படும் வரை இதுதான் நிலை.
தனியுடமையாக இருந்த நெருப்பை, பொதுவுடமையாக்கி அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதே கார்த்திகை தீபம் ஏற்றும் வரலாறு. அது கடவுள் வழிபாடு சார்ந்த செயலாக பக்தி இயக்க காலத்தில் மாற்றப்பட்டது.
விழாக்காலங்களில் குத்துவிளக்கு ஏற்றுவதும், வீட்டுக்கு வரும் மருமகள் விளக்கு ஏற்றுவதும் சடங்கு சார்ந்த செயல் அல்ல. அது இயற்கையிலிருந்து உருவான ஒரு செயலை பரவலாக்கிய ஏற்பாடே. ஆனால் அது பெண்கள் சார்ந்த செயலாக மாற்றியது ஆணாதிக்க செயல். இன்று வீடுகள் தோறும் எல்லோரும் விளக்கேற்றுவோம்.